பஜனைக்கோவில் வரலாறு

முன்னோர்களால் பல ஆண்டுகளுக்கு முன் சுமார் தோராயாமாக 150 ஆண்டுகளுக்கு முன்பு புனித அந்தோணியார் பஜனைக்கோவில் தொடங்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆண்டின் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் மாலையில் பஜனைக்கோவிலில் பஜனை குழு கூடி இறைவழிபாடு செய்தல் மற்றும் பஜனை பாடல்கள் பாடியபடி  புனித அந்தோணியார் திருவுருவப்படம் ஏந்தி ஊரை சுற்றி வலம் வந்து பஜனை எடுத்தல் இன்றளவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மடத்து தெருவிலும் குளத்து மேட்டுத்தெருவிலும் இயங்கி வந்த சிற்றாலயம் ஏட்டு என்கிற திரு A.வேதநாயகம் அவர்களின் முயற்சியால் அவரது பெயரிலேயே 1945 ம் வருடம் ஆகஸ்டு மாதம் தற்பொழுது பஜனைக்கோவில் இருக்கும் இடம் 1½ சென்ட் இடம் புளிச்சக்கள், அப்பாய் குடும்பத்தாரால் தானமாக வழங்கப்பட்டு நிலையான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
பல ஆண்டுகள் மண்சுவர் கூரை கட்டிடமாகவும், பின்னர் ஓட்டு கட்டிடமாகவும் இயங்கி வந்த ஆலயம் திரு D.பெரியநாயகசாமி அவர்களின் பேருதவியால் 23.02.1993 ல் மெத்தை கட்டிடமாக கோவில் புதுப்பிக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது.

பஜனைக்கென்று பல பாடல்கள் முன்னோர்களால் சொந்தமாக இயற்றப்பட்டு ஜெப, பாடல் வழிபாடுகள் நடைபெறுகிறது. பாடல்கள் கோலாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது மேலும் பாடல்களுக்கான சிறப்பு. முன்னோர்களின் பாடல்களை அடுத்த தலைமுறைக்கு வழங்கியதில் திரு அபிரகாம் அவர்களின் பங்களிப்பும் அடுத்து மத்திய காலத்தில் திரு D.குழந்தைசாமி ஆசிரியர் அவர்களின் பங்களிப்பு மிக சிறப்பு வாய்ந்தது. தற்காலத்தில் திரு மந்திரி (எ) S.ராயப்பன் ஆசிரியர், சேட்டு (எ) J.குழந்தை டேவிட் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களுடன் சிறப்பாக பாடப்பட்டு வருகின்றன.
பல காலம் முதல், ஒவ்வொரு வருடமும் புனித அந்தோணியார் சிறப்பு தேர்பவனியும், பெரிய ஏரியில் இறை வழிபாடும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. திரு K.சின்ராஜ் அவர்களின் பெரும் முயற்சியால் திருவிழா தேதியானது ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இரண்டாம் திங்கள் கிழமை பெரிய ஏரியில் இறைவழிபாடும் அதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை மாலை பஜனைக்கோவிலிலேயே  திருப்பலியும் இரவு ஆடம்பர தேர்பவனி என்பதையும் நிலையாக கொண்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது.
பெரிய ஏரியில் அன்னதான வழிபாட்டின்பொழுது காட்டின் மத்தியப்பகுதியில் உள்ள ஆடு மேய்த்தவர்களுக்கு புனித அந்தோணியார் காட்சியளித்ததாக கூறப்படும் இடத்திற்கு பஜனை குழுவினர் சென்று ஜெப வழிபாடு செய்து வந்த பின்னரே அன்னதான நிகழ்வு நடைபெறும் என்பது மரபு.
காலம் காலம் தொட்டு இன்றளவும் எள்ளளவும் குறையாத ஊர் மற்றும் சமூக  ஒற்றுமையுடன் உபயதாரர்களின் மனமுவந்த பேருதவியாலும் உறவுகளின் கடின உழைப்பாலும் கோவில் செப்பனிடுதல், தேர்பவனி நடத்துதல், அன்னதானம் வழங்குதல் போன்றவை இன்றளவும் தொய்வில்லாமல் நடந்து வருகிறது.
சமூக ஒற்றுமைக்காக ஆரம்பிக்கப்பட்ட இப் புனித அந்தோணியார் பஜனைக்கோவிலினை அங்கமாக கொண்ட ஒவ்வொரு குடும்ப நபருக்கும் நன்றி பாராட்டப்படுகிறது. இதுவரை கோவிலின் அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று சிறப்புடன் நடத்திய அனைத்து  முன்னாள் தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் மேனேஜர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு  பஜனைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டப்படுகிறது.