கற்பில் உத்தமமான லீலி மலராகவும் ஊற்றுமாகவும் இருக்கும் தூய அந்தோணியாரே, எளிமைத் தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, நிர்மல சுத்தத்தின் மாதிரியே, தூய ஒளி வீசும் விண்மீனே, ஆசார முறைகளின் சோடினையே, விண்ணோர்களின் தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காமாந்தகரை அடக்குகிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே,
துன்பப்படுவோருக்கு ஆறுதல் கொடுப்பவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சர்வேசுரனுடைய சுதனானவரைத் தாங்குகிறவராய், தேவ சிநேகத்தின் பேரில் மிகவும் எரிகிற அழலுமாய், பச்சாதாபத்தின் சீவியருமான சுவாலையுமாய், தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களை தேவ பட்சத்தின் நெருப்பினாலே கொளுத்தி எரித்தவருமாயிருக்கிற விருப்பமுள்ள வேத சாட்சியே, திவ்வியமான தீர்க்கதரிசனரே, பாவிகளைத் திருத்துகிறவரே, நரகத்திற்கு பயங்கரத்தை விடுகிறவரே, எளிய பாவிகளாய் இருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும் அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும், ஞானமுள்ள தியானத்தையும் சர்வேசுரனானவர் எங்களுக்குத் தந்தருளும்படி அவரை வேண்டிக் கொள்ளும். மிகவும் எரிகிற பட்சத்தின் அழலானவரே, பாவிகளான எங்களுடைய உலர்ந்த இருதயத்தை தேவ பட்சத்தினாலே கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சியுடனே உம்மை வேண்டிக் கொள்கிறோம் ஆமென். செபிப்போமாக! தயை மிகுந்த இறைவா! உம் அன்பு அடியாரான தூய அந்தோணியாரைப் போல் நானும் அழிந்து போகிற உலகச் செல்வங்கள் மேல் எனக்குள்ள பற்றை அகற்றி, உம்மிடம் வந்து, உமக்குப் பணி செய்து வருவதே இப்பூவுலகில் எனக்கு உண்மையான நன்மையே தவிர வேறு இல்லை என்று கண்டுபிடிக்கச் செய்தருளும். உலக நாட்டங்களிலும், செல்வம், பெருமை, வெகுமானத்தின் மேலும், உடல் இன்பங்கள் மேலும், எனக்குள்ள ஆசையை முழுதும் அகற்றிட எனக்கு அறிவைத் தந்தருளும். திருஅவையின் உண்மையான மகனாக நான் என்றும் வாழ அருள் தாரும். ஆமென்.